செய்திகள்

ஆப்கானிஸ்தான்: காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

Published On 2017-07-24 05:06 GMT   |   Update On 2017-07-24 05:06 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகினர்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா ஹசாரா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். இன்று காலை அந்த பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டுகளை நிரப்பிய காரை பொதுமக்கள் மீது மோதச் செய்தான்

இந்த திடீர் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் என 24 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது. அரசின் துணை தலைமை நிர்வாகியான மொகமது மொஹாகிக் வீட்டின் அருகில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த இரண்டு மாதத்தில் நடந்த 3-வது பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ’’அரசு ஊழியர்கள் நிறைந்திருந்த மினி பேருந்தை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News