செய்திகள்

பாகிஸ்தான்: ஒரே நாளில் 3 குண்டு வெடிப்பு - 62 பேர் பரிதாப பலி

Published On 2017-06-23 20:44 GMT   |   Update On 2017-06-23 20:44 GMT
பாகிஸ்தான் நாட்டில் நேற்று ஒரே நாளில் தீவிரவாதிகள் நடத்திய மூன்று குண்டு வெடிப்பில் சிக்கி 62 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகரின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தின் அருகே ரமலான் மாதம் என்பதால் அதிகளவிலான மக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். அப்போது, அங்கு வந்த சந்தேகத்துக்குரிய காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, காரில் இருந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது.

இந்த கோர தாக்குதலில் 7 போலீசார் உள்பட 13 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 9 பேர் உள்பட 20 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதிர்ச்சி நீங்குவதற்குள்ளாகவே, ஒரு மணி நேர இடைவேளையில் குர்ராம் நகரத்தில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியான பரச்சினாரில் உள்ள சந்தையில் இரட்டை குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது.



இந்த தாக்குதலில் 45 பேர் பலியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேற்கண்ட மூன்று குண்டு வெடிப்புகளுக்கும் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தெரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Tags:    

Similar News