செய்திகள்

பூமியைப் போன்று 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: ‘நாசா’ விஞ்ஞானி தகவல்

Published On 2017-06-21 03:28 GMT   |   Update On 2017-06-21 03:28 GMT
10 கிரகங்கள் பூமியைப் போன்று வாழ்வதற்கான சூழலை கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை ‘நாசா’ விஞ்ஞானி மரியோ பெரஸ் பகிர்ந்துகொண்டார்.
வாஷிங்கடன்:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ வேற்று கிரகங்கள் பற்றி ஆராய்வதற்கு விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வந்தது.

இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

வேற்று கிரகவாசிகளால் தாங்கள் ஒருவேளை கடத்தப்பட்டுவிடக்கூடும் என கருதி அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், எதிர்பார்ப்பு எந்தளவுக்கு நிலவியது என்று.

இந்த நிலையில் கலிபோர்னியாவில் ‘நாசா’ விஞ்ஞானி மரியோ பெரஸ் நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) ‘நாசா’ வின் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதன் முக்கிய அம்சங்கள்:-

* கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் 219 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களுடன் சேர்த்து, இப்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ள மொத்த கிரகங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 ஆகும்.



* இவற்றில் 2,300 மட்டும் கிரகங்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியவை, கிரகங்கள் போன்றவை.

* இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 219 கிரகங்களில் 10 கிரகங்கள் மட்டும் பூமியைப் போன்று வாழ்வதற்கான சூழலை கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு கிரகம், பூமிக்கு வெகு அருகில் இருக்கிறது.

* இந்த 10 கிரகங்களின் மேற்பரப்பில் தண்ணீர், திரவ நிலையில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

வேற்று கிரகங்கள் பற்றிய தகவல்களை விஞ்ஞானி மரியோ பெரஸ் வெளியிட்டாலும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வேற்று கிரகவாசிகள் குறித்து மூச்சுவிடவில்லை. எனவே வேற்று மனிதர்கள் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் புதிராகவே உள்ளது.

இருப்பினும் இதுபற்றி நிலாவுக்கு சென்ற 6-வது மனிதர் என்ற பெயரைப் பெற்றுள்ள எட்கர் மிட்செல், “வேற்று கிரகவாசிகள் பல முறை மனிதர்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ள தகவல், இன்னும் வேற்று கிரகவாசிகள் மீதான ஈர்ப்பை தொடர வைப்பதாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News