செய்திகள்

ஜப்பானில் தரையிறங்கிய தென்கொரியா நாட்டு விமான என்ஜினில் புகை: பயணிகள் பீதி

Published On 2017-06-09 11:50 GMT   |   Update On 2017-06-09 11:50 GMT
ஜப்பானில் தரையிறங்கிய தென்கொரியா நாட்டு விமான என்ஜினில் திடீரென்று புகை கிளம்பியதால் அதில் வந்த பயணிகள் பீதியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ:

தென்கொரியா நாட்டை சேர்ந்த போயிங் 737 ரக விமானம் பூசான் நகரில் இருந்து ஜப்பான் நாட்டின் வான் எல்லை வழியாக இன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனர்.

ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஃபுக்குவோக்கா விமான நிலைய வான் எல்லைக்குள் நுழைந்தபோது அந்த விமானத்தின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று புகை கிளம்பியது. இதையறிந்த விமானப் பயணிகளும், பணியாளர்களும் பீதியில் அலறினர்.

இதையடுத்து, ஃபுக்குவோக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க தென்கொரியா நாட்டு விமானி அனுமதி கேட்டார். உடனடியாக அனுமதி கிடைத்ததையடுத்து, அந்த விமானம் தரையிறங்குவதற்குள் என்ஜின் பகுதியில் இருந்து வந்த புகை தானாகவே அடங்கி விட்டது.

தரையிறங்குவதற்குள் விமான நிலையத்தில் தயார்நிலையில் இருந்த தீயணப்பு மற்றும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு, அதில் இருந்த 162 பேரையும் பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர்.

என்ஜின் பகுதியில் எழுந்த திடீர் புகைக்கான காரணம் என்னவென்று தெளிவாக குறிப்பிடப்படாத நிலையில், இந்த சம்பவத்தால் பயணிகளில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் நேரவில்லை என ஃபுக்குவோக்கா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News