செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல்: மோசூல் நகரை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை

Published On 2017-05-27 06:52 GMT   |   Update On 2017-05-27 06:52 GMT
ஈராக் நாட்டில் மோசூல் நகரில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நிகழ்த்த இருப்பதால் பொதுமக்கள் அந்நகரை விட்டு வெளியேறுமாறு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாக்தாத்:

ஈராக் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரமான மோசூல் மாகாணத்தில் சுமார் 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர்.

இந்நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசூல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றியுள்ள இவர்கள் இங்கிருந்தவாறு உலகம் முழுவதும் அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.



இவர்களை ஒழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் துணையாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக மோசூலை கைப்பற்ற அமெரிக்க கூட்டுப்படையினரின் துணையுடன் ஈராக் ராணுவம் உச்சகட்ட தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக மோசூல் நகரின் பெரும்பான்மையான பகுதிகள் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.



இந்நிலையில், எஞ்சியுள்ள பகுதிகளை மீட்பதற்காக ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நிகழ்த்தப் போவதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போருக்கு பின்னர் சுமார் 2 லட்சம் மக்கள் மோசூல் நகரை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.சபை கடந்த வாரம் தெரிவித்திருந்தது. ஐ.எஸ் இயக்கத்தினர் மீது ஈராக் ராணுவம் வலுவான தாக்குதல் நிகழ்த்தும் பட்சத்தில் மோசூல் நகரம் முழுவதுமாக அரசுப்படையினரின் வசம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News