செய்திகள்

பாரீஸ் ரயில் நிலையத்தில் கத்தியுடன் பீதியை கிளப்பிய நபர் கைது

Published On 2017-04-22 18:56 GMT   |   Update On 2017-04-22 18:56 GMT
பாரீஸ் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்து பீதியை கிளப்பிய மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
பாரீஸ்:

பாரீஸின் கரே டு நார்டு ரயில் நிலையத்தில் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்து பீதியை கிளப்பிய நபரை பாரீஸ் போலீசார் கைது செய்தனர்.

மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு சென்றதை பார்த்த போலீசார், உடனடியாக அவரை சுற்றிவளைத்து அவரிடமிருந்த கத்தியை மீட்டு, அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, முன்னதாக பாரீஸில் போலீஸ் அதிகாரி ஒருவர் மர்ம நபரால் கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோன்ற பயங்கரமான சம்பவத்தை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தியுடன் வந்த நபரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் பாரீஸில் இருந்து வரும் மற்றொரு தகவலின்படி, மர்ம நபர் கத்தியுடன் சுற்றித் திரிந்ததால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பலர், தங்களது உடைமைகளை ரயில் நிலையத்திலேயே விட்டுவிட்டு பதறியடித்து ஓடியதாக மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர் 20 வயது மதிக்கத்தக்க மலியன் என்ற இளைஞர் என்றும், அவரை பயணிகள் பலர் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து கரே டு நார்டு ரயில் நிலையம் மாலை 4 மணிவரை மூடப்பட்டதாகவும், லண்டன் செல்லவிருந்த ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதாகவும் பாரீசில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சுக்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் சாம்ஸ் எலிசீஸ் என்ற இடத்தில் நிகழ்ந்த தாக்குதலில் போலீசார் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பிரான்சில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதில் கடந்த 2015-ல் இருந்து தற்போது வரை 239 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News