செய்திகள்

டிரம்ப் வருமான வரி கணக்கு வெளியிட வலியுறுத்தி அமெரிக்காவில் 150 இடங்களில் பேரணி

Published On 2017-04-17 00:33 GMT   |   Update On 2017-04-17 00:33 GMT
அமெரிக்காவில் ஜனாதிபதி வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வலியுறுத்தி 150 இடங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகள் நடத்தினர்.
வாஷிங்டன்:

அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதைப் பின்பற்றி, தனது வருமான வரி கணக்கை வெளியிட முடியாது என ஜனாதிபதி தேர்தலின்போது குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் கூறி விட்டார்.

இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, பதவி ஏற்ற நிலையில், கடந்த மாதம் அவரது 2005-ம் ஆண்டு வருமான வரி கணக்கு விவர அறிக்கையை அமெரிக்காவின் ‘எம்.எஸ்.என்.பி.சி.’ டி.வி. சானல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் டிரம்ப் தனது வருமானம் 150 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,005 கோடி) என கூறி, 38 மில்லியன் டாலர் (சுமார் ரூ.254 கோடி) வருமான வரி செலுத்தியது அம்பலத்துக்கு வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஜனாதிபதி வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடும் அவசியம், சட்டப்பூர்வமாக இல்லை என்றபோதும், டிரம்ப் தனது வருமான வரி கணக்கு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்று குரல் வலுத்து வருகிறது.

இது தொடர்பாக நேற்று அமெரிக்கா முழுவதும் 150 இடங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகள் நடத்தினர். அங்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், இந்த பேரணிகள் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

பெர்க்லி நகரில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே டிரம்பின் ஆலோசகர், வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வேண்டாம் என டிரம்பிடம் தான் ஒருபோதும் கூறவில்லை என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News