செய்திகள்

தீவிரவாத அச்சுறுத்தலால் இங்கிலாந்து விமான நிலையங்கள், அணு மின்நிலையங்களில் தீவிர பாதுகாப்பு

Published On 2017-04-03 00:05 GMT   |   Update On 2017-04-03 00:05 GMT
இங்கிலாந்தில் உள்ள அணு மின் நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள அணு மின் நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் அதிநவீன சோதனை இயந்திரங்கள் கண்டுபிடிக்க முடியாத விதத்தில் மொபைல், லேப்டாப் மற்றும் ஐ-பேடுகளில் பொருத்தக் கூடிய சக்தி வாய்ந்த சிறிய வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் உருவாக்கியிருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், நடுவானில் விமானத்தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என்பதால், அமெரிக்கா, பிரிட்டன் வரும் விமானப் பயணிகள் லேப்டாப்களை பயணத்தின்போது கையில் வைத்திருக்கக் கூடாது என அந்நாடுகள் தடை விதித்தன.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு கட்டமைப்பை ஊடுருவி, அணு மின் நிலையங்களில் சேதம், விபத்துகளை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும் அந்நாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து அணு மின் நிலையங்களின் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் வசம் வைத்துள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை கடும் சோதனைக்கு பின்னரே பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

Similar News