செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு: தென் கொரியா அதிபர் பார்க் கியூன் கைது

Published On 2017-03-31 00:17 GMT   |   Update On 2017-03-31 00:17 GMT
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தென் கொரியா அதிபர் பார்க் கியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியோல்:

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியூன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிக முக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

இதையடுத்து, கடந்த மாதம் முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார்.  மேலும், அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் கடந்த ஆண்டில் நடைபெற்றது.

இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இம்மாதம் பத்தாம் தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பார்க் கியூன் ஹே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பக விசாரணை முகமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

அதன்படி, சியோல் நகரில் உள்ள லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பக அலுவலகத்தில் அவர் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.  விசாரணைக்கு ஆஜரான பார்க்கிடம் அதிகாரிகள் துருவித்துருவி கேள்விகளை கேட்டு அவர் மீதான குற்றச்சாட்டை பலப்படுத்தும் ஆதாரங்களை சேகரித்தனர்.

அவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் பார்க் கியூன் ஹே விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹே ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இதற்கான பிடிவாரண்டை அனுப்பி உள்ளது.

Similar News