செய்திகள்

மேற்கு மொசூல் ராணுவ நடவடிக்கையில் 300 பொதுமக்கள் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்

Published On 2017-03-28 14:47 GMT   |   Update On 2017-03-28 14:47 GMT
ஈராக்கின் மேற்கு மொசூல் நகரை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
ஜெனீவா:

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மேற்கு மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்பதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் தரப்பிலும் அதிக அளவிலான உயிர்ப்பலி ஏற்படுகிறது.

இந்த சண்டை காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 6 லட்சம் மக்கள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேற்கு மொசூல் நகரை கைப்பற்றுவதற்காக ராணுவம் தாக்குதலைத் தொடங்கிய தினமான பிப்ரவரி 17-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரையில் 307 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 23 முதல் 26 வரை 95 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வந்திருப்பதாகவும், அந்த தகவல் சரிபார்க்கப்பட்ட பின்னர், பலி எண்ணிக்கை 400-ஐத் தாண்டும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்பாக ஈராக் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது. இதனை வரவேற்றுள்ள ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் உசைன், எந்த குறிப்பிட்ட மரணங்களுக்கும் கூட்டுப்படையை நேரடியாக தனது அலுவலகம் குற்றம் சாட்டவில்லை என்று கூறினார். அதேசமயம், பொதுமக்கள் பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகளை அவசரமாக ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதால் உயிர்ப்பலி அதிகமாவதாக கூறப்படுகிறது.

Similar News