செய்திகள்

ஹாங்காங் தலைவராக முதல் முறையாக பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Published On 2017-03-26 23:06 GMT   |   Update On 2017-03-26 23:06 GMT
சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக திகழும் ஹாங்காங்கின் புதிய தலைவரை தேர்வு செய்யும் தேர்தலில் முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹாங்காங்:

சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் திகழ்கிறது. ஹாங்காங் விவகாரங்களில் சீனா தலையிடுவதற்கு எதிராக அங்கு அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஹாங்காங்கின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில், கேரி லாம் (வயது 59) என்ற பெண் வெற்றி பெற்றார். இதன்மூலம் இவர், ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியான இவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இவர், 1,200 சீன ஆதரவு வாக்காளர்களைக் கொண்ட கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக 777 ஓட்டுகள் கிடைத்தன. இவருக்கு அடுத்தபடியாக வந்துள்ள முன்னாள் நிதித்துறை தலைவர் ஜான் சாங் 365 ஓட்டுகளையும், ஓய்வுபெற்ற நீதிபதியான வூ குவாக் ஹிங் 21 ஓட்டுகளையும் பெற்றனர்.

இந்த தேர்தல் நடந்த அரங்கத்துக்கு வெளியே ஜனநாயக ஆதரவு குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. இந்த தேர்தல்முறை வெட்கக்கேடானது என அவர்கள் குற்றம்சாட்டினர்.

Similar News