செய்திகள்

ரஷ்யாவில் கடும் துப்பாக்கி சண்டை: 6 கிளர்ச்சியாளர்கள், 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Published On 2017-03-25 11:46 GMT   |   Update On 2017-03-25 11:46 GMT
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 6 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
மாஸ்கோ:

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதேபோல் செசன்யாவிலும் வன்முறை மோதல்கள் ஏற்படுகின்றன.

கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி ரஷ்ய படையினரை தாக்கி வருகின்றனர். எனவே, வடக்கு காகசஸ் மற்றும் செசன்யா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக செசன்யாவில் கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், செசன்யாவில் உள்ள தேசிய பாதுகாப்பு படை முகாமினை தகர்க்கும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ராணுவமும் பதிலடி கொடுத்தது. இரு தரப்பிற்கிடையே நேற்று நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் ராணுவம் தரப்பில் 6 பேரும், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 6 பேரும் உயிரிழந்தனர்.

கடும் மூடுபனியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி தாக்குதலை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Similar News