செய்திகள்

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் 6 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று வீடு திரும்பினார்

Published On 2017-03-24 10:57 GMT   |   Update On 2017-03-24 10:57 GMT
கைது செய்யப்பட்டு சிறைவாசத்துடன் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் ஆறாண்டுகளுக்கு பின்னர் இன்று வீடு திரும்பினார்.
கெய்ரோ:

அராபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்தபோது ராணுவம் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கையில் போராட்டக்காரர்களில் சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முபாரக்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு முறையாக விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கின் மீது மறுவிசாரணை நடத்த வேண்டும் என முபாரக் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்கிலும் அரசுப் பணத்தை தனிப்பட்ட முறையில் ஆடம்பரமாக செலவு செய்த வழக்கிலும் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஆறாண்டுகளாக சிறையில் அடைப்பட்டிருந்தத முபாரக், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டில் இருந்து ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, போராட்டக்காரர்களை கொன்ற வழக்கில் இருந்து அவரை விடுவித்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, மாடி ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்து இன்று அவர் வீடு திரும்பினார்.

ஹெலியோபோலிஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்துக்கு ஆறாண்டுகளுக்கு பின்னர் இன்று முபாரக் செல்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News