செய்திகள்

தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய இலங்கை ராணுவ அதிகாரிகள்: பகீர் தகவல்

Published On 2017-02-21 12:39 GMT   |   Update On 2017-02-21 12:39 GMT
இலங்கையின் சிங்கள ராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை போரின்போதும், அதன்பின்பும் தமிழ் பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு ராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கொடுத்துள்ளது.

இலங்கையில் தனி தமிழீழம் கோரி நடைபெற்ற போரின்போது அப்போதைய ராஜபக்சே அரசால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது தமிழினப் பெண்களை இலங்கை ராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக வைத்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு தமிழ் பெண்கள் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தது உண்மைதான் என உறுதி செய்துள்ளது.



வவுனியா, புத்தளம் உள்ளிட்ட இடங்களில் பெண்களை கைது செய்து, அடைத்து வைத்து இலங்கை ராணுவத்தினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் பற்றிய விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. முகாம்கள் இயங்கியதாக கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ராணுவ அதிகாரிகளில் மேஜர் ஒருவரும் லெப்டினட் ஒருவரும் அடங்குகிறார். சித்திரவதை மற்றும் பயங்கரமான பாலியல் தாக்குதல்களை வெளியிட்டுள்ள 55 பெண்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அமைப்பு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபச்சேவின் ஆட்சிக் காலத்தில் 48 பெண்களும், தற்போதைய சிறீசேனா ஆட்சியில் 7 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க முடியாது என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Similar News