செய்திகள்

சோமாலியாவில் கென்ய வீரர்கள் 57 பேர் பலி

Published On 2017-01-27 20:25 GMT   |   Update On 2017-01-27 20:25 GMT
கென்யா எல்லை அருகே ராணுவ தளம் ஒன்றில் கென்ய படைவீரர்கள் 57 பேரை கொன்று குவித்துள்ளதாக அல் ஷபாப் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மொகாதிசு:

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ஆப்பிரிக்க யூனியனின் அமிசோம் படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கென்யா எல்லை அருகே குல்பியோவ் நகரில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் கென்ய படைவீரர்கள் 57 பேரை கொன்று குவித்துள்ளதாக அல் ஷபாப் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறினார்.

தங்களது இயக்கத்தை சேர்ந்த 2 போராளிகள், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டிச்சென்று அந்த ராணுவ தளத்தின்மீது மோதி, இந்த உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். ஆனால் கென்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் பால் ஜூகுணா இதை மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “அது தவறான தகவல். அங்கு தாக்குதல் நடந்து வருகிறது. அது குறித்த தகவல்கள் இப்போதுதான் வரத்தொடங்கி உள்ளன” என குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதம், கென்ய எல்லையையொட்டி எல் அட்டே என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தி 100-க்கும் மேற்பட்ட கென்ய வீரர்களை கொன்று குவித்ததாக அல் ஷபாப் இயக்கத்தினர் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

Similar News