செய்திகள்

பத்திரிகையாளர் படுகொலை: இலங்கை மந்திரியிடம் 5 மணி நேரம் விசாரணை

Published On 2017-01-22 05:33 GMT   |   Update On 2017-01-22 05:33 GMT
இலங்கையில் ராஜபக்சே அரசை எதிர்த்து எழுதிவந்த பத்திரிகையாளர் வழிமறித்து கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டின் ராணுவ முன்னாள் தளபதியும், பிராந்திய மேம்பாட்டு மந்திரியுமான சரத் பொன்சேகாவிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொழும்பு:

இலங்கையில் ஈழ விடுதலைக்காக போராடிய தமிழர்களை ஒடுக்குவதற்கு முன்னாள் அதிபர் ராஜபக்சேவால் ராணுவ கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டவர் சரத் பொன்சேகா. பின்னாளில், ராஜபக்சேவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா தோல்வியை தழுவினார்.

பின்னர், தேசத்துரோக குற்றத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சரத் பொன்சேகா, ஜாமினில் விடுதலையாகி கடந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவை ஆதரித்தார்.

இதையடுத்து, இலங்கை அதிபராக தற்போது பொறுப்பேற்று வரும் மைத்ரிபாலா சிறிசேனாவின் அரசில் அவருக்கு பிராந்திய மேம்பாட்டு மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்தா விக்ரமதுங்கா வழிமறித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று சரத் பொன்சேகாவிடம் சி.ஐ.டி. போலீசார் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத் பொன்சேகா, இந்த கொலை தொடர்பாக முன்னாள் அதிபர் ராஜபக்சே என் மீது சுமத்திய பழியில் இருந்து எனது பெயரை விடுவித்துகொள்ள இந்த விசாரணை ஒரு வாய்ப்பாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

Similar News