செய்திகள்

துபாயில் பணம் இன்றி தவித்த தமிழக தொழிலாளி சொந்த ஊர் திரும்பினார்

Published On 2016-12-03 22:30 GMT   |   Update On 2016-12-03 22:30 GMT
துபாயில் கோர்ட்டில் ஆஜராவதற்கு பணம் இன்றி 1,000 கி.மீ. நடந்த தமிழக தொழிலாளி சொந்த ஊர் திரும்பினார்.
துபாய்:

துபாயில் கோர்ட்டில் ஆஜராவதற்கு பணம் இன்றி 1,000 கி.மீ. நடந்த தமிழக தொழிலாளி சொந்த ஊர் திரும்பினார்.

திருச்சியை சேர்ந்த ஜெகநாதன் செல்வராஜ் (வயது 48) என்பவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். பணிக்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் அந்த நிறுவனம் ஜெகநாதனுக்கு சொந்த ஊருக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்துத்தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனம் மீது துபாய் தொழிலாளர் கோர்ட்டில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் இந்த கோர்ட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு சென்றுவர போக்குவரத்துக்கு கூட அவரிடம் பணமில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் அவர் நடந்தே கோர்ட்டுக்கு சென்று திரும்பினார். கடந்த 2 ஆண்டுகளில் 25 முறை கோர்ட்டுக்கு நடந்தே சென்றதன் மூலம் அவர் 1,000 கி.மீ. தூரம் நடந்து இருப்பதாக தெரிகிறது.

இது பற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் விளக்கமும் கேட்டிருந்தார்.

இதற்கிடையே ஜெகநாதன் செல்வராஜுக்கு உதவ பொதுமக்கள் பலர் முன்வந்தனர். மேலும் துபாய் போலீசின் மனித உரிமை துறையும் இந்த பிரச்சினையில் தலையிட்டது. போலீசார் ஜெகநாதனின் பாஸ்போர்ட்டை தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்று அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது.

துபாய் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்த ஜெகநாதன், பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். இந்த தகவலை இந்திய துணைத் தூதரகம் மற்றும் இந்திய தொழிலாளர் நல மையம் ஆகியவை உறுதி செய்துள்ளன. 

Similar News