செய்திகள்

மொசூல் போரில் ஒரே மாதத்தில் 1950 ராணுவ வீரர்கள் பலி - 926 பொதுமக்கள் உயிரிழப்பு

Published On 2016-12-02 08:50 GMT   |   Update On 2016-12-02 08:50 GMT
ஈராக் மொசூல் நகரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சண்டையில் 1959 ராணுவ வீரர்கள் பலியாகினர். 926 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
மொசூல்:

ஈராக்கில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக மொசூல் மற்றும் அதை சுற்றிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி அங்கு தனிநாடு அமைத்து இருந்தனர். அவற்றை மீட்கும் முயற்சியில் ஈராக் ராணுவம் ஈடுபட்டது.

அதற்காக தீவிரவாதிகளுடன் கடும் போரில் ஈடுபட்டது. அவர்களுக்கு அமெரிக்க ராணுவமும், குர்த்படைகளும் ஆதரவாக செயல்பட்டன. கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக அங்கு கடும் சண்டை நடந்து வருகிறது.

மொசூலின் பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்டுவிட்டன. இன்னும் சில பகுதிகள் மட்டுமே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ளன. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சண்டையில் 1959 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் 926 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 930 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மொசூலில் இருந்து 77 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையே சண்டை நடந்த மொசூலில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். போரின் போது குழாய்கள் உடைந்து விட்டதால் சுத்தமான குடிதண்ணீர் கிடைக்காமல் அவர்கள் தவிக்கின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுமையாக வெளியேறாததால் அங்கு பழுதடைந்த தண்ணீர் குழாய்களை உடனடியாக சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Similar News