செய்திகள்

மன்னர் 10-ம் ராமராக பதவி ஏற்க நாடு திரும்பிய தாய்லாந்து பட்டத்து இளவரசர்

Published On 2016-12-01 21:54 GMT   |   Update On 2016-12-01 21:55 GMT
ஜெர்மனி சென்றிருந்த தாய்லாந்து பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன் மன்னர் 10-ம் ராமராக பதவியேற்க நேற்று நாடு திரும்பினார்.
பாங்காக்:

தாய்லாந்து நாட்டில் 70 ஆண்டுகள் மன்னராக இருந்து வந்த பூமிபால் அதுல்யதேஜ், தனது 88-வது வயதில் கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி மரணம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன் (63), நாட்டின் புதிய மன்னர் ஆவார் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் தாய்லாந்து பாராளுமன்றம், பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோனை மன்னர் பதவி ஏற்க முறைப்படி அழைப்பு விடுத்தது.

அதைத் தொடர்ந்து, ஜெர்மனி சென்றிருந்த இளவரசர் மகா வஜிரலோங்கோன் நேற்று நாடு திரும்பினார். இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜெர்மனி சென்றிருந்த பட்டத்து இளவரசர் பாங்காக் திரும்பி விட்டார் என்பதை உறுதி செய்கிறேன்” என்று கூறினார்.

மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், மரணம் அடைந்ததின் 50-வது நாள் சடங்கு, புத்த மத வழக்கப்படி நடக்கிறது. அதன்பின்னர் இளவரசர் மகா வஜிரலோங்கோன், பாராளுமன்ற அழைப்பை ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிடுவார்.

அதன்பின்னர் மன்னருக்கு முடிசூட்டும் விழா நடைபெறும். இளவரசர் மகா வஜிரலோங்கோன் மன்னர் ஆன பின்னர் மன்னர் 10-ம் ராமர் என அழைக்கப்படுவார். 

Similar News