செய்திகள்

பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடிய மியாமி மக்கள்

Published On 2016-11-27 08:32 GMT   |   Update On 2016-11-27 08:32 GMT
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை அமெரிக்காவின் மியாமி நகரில் வாழும் கியூபா மக்களில் பலர் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நியூயார்க்:

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் கம்யூனிச கொள்கைகளுக்கு எதிரான பலர் அந்நாட்டை விட்டு அருகாமையில் உள்ள அமெரிக்காவின் மியாமி நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மியாமியில் இவர்கள் வசிக்கும் பகுதி கியூபா தலைநகரின் நினைவாக லிட்டில் ஹவானா என்றழைக்கப்படுகிறது.

பிடல் காஸ்ட்ரோ நேற்று மரணம் அடைந்த செய்தியை அறிந்த அவரது அதிருப்தியாளர்கள் லிட்டில் ஹவானா நகரின் முக்கிய பகுதிகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேளங்களை அடித்தும், கார்களின் ஹாரன்களை ஒலிக்கச் செய்தும் அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவார கூச்சலிட்டனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கியூபாவில் இருந்து வெளியேறிய பாப்லோ அரென்சிபியா என்ற ஓய்வுபெற்ற 67 வயது பள்ளி ஆசிரியை, தங்களது மகிழ்ச்சி கொண்டாட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒருவரின் மரணத்தை மற்றவர்கள் கொண்டாடி மகிழ்வது என்பது கவலைக்குரிய செயல்தான். இப்படிப்பட்டவர் பிறக்காமலே இருந்திருக்கலாம் என்பதுதான் இந்த கொண்டாட்டத்தின் நோக்கமாகும்’ என்றார்.

நரகத்துக்கு சென்றிருக்கும் பிடல் காஸ்ட்ரோவால் தனது வேலை பறிபோய் விடுமோ? என்று அவரைப்பற்றி இனி சாத்தான்தான் கவலைப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Similar News