செய்திகள்

சோமாலியா கடற்கொள்ளையரிடம் 5 ஆண்டுகளாக சிக்கி தவித்த 26 பிணைக்கைதிகள் விடுதலை

Published On 2016-10-23 08:59 GMT   |   Update On 2016-10-23 08:59 GMT
சோமாலியா கடற்கொள்ளயர்களிடம் சிக்கி 5 ஆண்டுகள் பிணைக் கைதிகளாக தவித்த 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மொகாடிசு:

சோமாலியா கடற்கொள்ளயர்களிடம் சிக்கி 5 ஆண்டுகள் பிணைக் கைதிகளாக தவித்த 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

சோமாலியா கடற் கொள்ளையர்கள் சரக்கு கப்பல், மீன்பிடி கப்பல் உள்ளிட்டவைகளை கடத்தி அதில் இருப்பவர்களை சிறை பிடித்து பிணைத்தொகை வசூலித்து வருகின்றனர்.

அதுபோல கடந்த 2012-ம் ஆண்டு செசல்ஸ் கடல் பகுதியில் மீன்பிடி கப்பலை மடக்கி கடத்தினர். அதில் இருந்த 26 மீனவர்களை சிறை பிடித்தனர். இவர்கள் அனைவரும் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, சீனா, தைவான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களை சிறை பிடித்த கடற்கொள்ளையர்கள் அவர்களை விடுவிக்க பிணைத்தொகை கேட்டனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே, அவர்களை நடுக்கடலில் கப்பலிலேயே சிறை வைத்திருந்தனர்.

இதற்கிடையே அக்கப்பல் மூழ்கியது. அதை தொடர்ந்து அவர்களை கடத்தி வந்து சோமாலியாவில் புதர்கள் அடங்கிய பகுதியில் மறைத்து அடைத்து வைத்திருந்தனர். சாப்பிட உணவு இன்றியும், குடிக்க தண்ணீர் இன்றியும், உடுத்த உடை இன்றியும் கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக கருதப்பட்டது. ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்த ஜான்ஸ் டீட் என்பவர் கடற்கொள்ளையர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்காக பிணைத்தொகை வழங்கப்பட்டதா? என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Similar News