செய்திகள்

அமெரிக்க செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாக்கள் நிராகரிப்பு

Published On 2016-06-22 03:12 GMT   |   Update On 2016-06-22 03:12 GMT
துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்குகிற விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் மசோதாக்கள் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் நிராகரிப்பு
வாஷிங்டன்:

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவதால், கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா, பாராளுமன்றத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன் புளோரிடா மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்குகிற விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்யும் மசோதாக்கள் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் கொண்டு வரப்பட்டன.

பயங்கரவாத சந்தேக பட்டியலில் இடம் பெற்றிருக்கிறவர்களுக்கு துப்பாக்கிகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் மசோதாவும் இதில் அடக்கம்.

ஆனால் குடியரசு கட்சியினர் கொண்டு வந்த மசோதாக்களை ஜனநாயக கட்சியினரும், ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த மசோதாக்களை குடியரசு கட்சியினரும் நிராகரித்தனர். ஆயுதங்கள் வைத்துக்கொள்வதற்கு அரசியல் சட்டம் தந்துள்ள உரிமைகளை மீறி விட்டதாக ஜனநாயக கட்சியினர் மீது குடியரசு கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதேபோன்று குடியரசு கட்சியினர் கொண்டு வந்துள்ள மசோதாக்கள் பலவீனமானவை என ஜனநாயக கட்சியினர் குறைகூறினர்.

Similar News