செய்திகள்

பனாமா பேப்பர்ஸ் விசாரணையில் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகுவேன்: நவாஸ் செரீப் சபதம்

Published On 2016-05-04 08:51 GMT   |   Update On 2016-05-04 08:51 GMT
பனாமா பேப்பர்ஸ் விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் சபதம் செய்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

மத்திய அமெரிக்க நாடான பனாமா, உலக நாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துகளை வாங்கிக் குவிக்கும், பணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக திகழும் ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய பட்டியல் சமீபத்தில் வெளியாகியது.

பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் பிள்ளைகளான மர்யாம், ஹாசன், ஹுசைன் ஆகியோர் வெளிநாடுகளில் நிறுவனம் தொடங்கி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் நவாஸ் செரீப் பெயர் இடம்பெற்றதை அடுத்து, அவருடைய குடும்பத்தின் தொடர்பு குறித்து முதலில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் பல முக்கியஸ்தர்களும் இடம்பெற்று உள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் உயர்மட்ட கமிஷனை நவாஸ் செரீப் நியமனம் செய்தார்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் என்று நவாஸ் செரீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் பான்னு டவுனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நவாஸ் செரீப், “எனக்கு எதிராக ஒரு பைசா அளவுக்கு ஊழல் நிரூபிக்கப்பட்டால் கூட, பதவியில் இருந்து விலக கால தாமதம் செய்யமாட்டேன்,” என்று சூளுரைத்தார்.

Similar News