என் மலர்tooltip icon

    உலகம்

    • பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் உள்பட 6 பேர் பலியாகினர்.
    • பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடைபெறுவது வழக்கம். எனவே அங்குள்ள டேங்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கோமல் பஜார் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனையடுத்து, அந்தப் பகுதி ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மோஷின் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா மற்றும் கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    ஒட்டாவா:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனா செல்லும் கார்னி வரும் 16-ம் தேதி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

    இதுதொடர்பாக மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய வர்த்தகக் குழப்பம் நிலவும் இந்த நேரத்தில் கனடா ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஒரே வர்த்தகப் பங்காளியைச் சார்ந்திருந்த நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம் என தெரிவித்தார்.

    கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மார்க் கார்னி சந்தித்தார். அப்போது சீனா வருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்ல கார்னி ஒப்புக் கொண்டார்.

    கனடா பிரதமரின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
    • டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

    இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, "ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். பெரும் போர் வெடிக்கும். தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்

    • போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களில் பலியானோரின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஈரானியப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு தரப்பில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 135 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்காத 9 குழந்தைகள் மற்றும் 9 பொதுமக்கள் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போராட்டம் குறித்த தகவல்கள் பரவுவதைத் தடுக்க ஈரான் அரசு கடந்த பல நாட்களாக இணையச் சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபடுவோர் 'கடவுளின் எதிரிகள்' எனக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம் என ஈரானிய அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.

    இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளார். மேலும், ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், போராட்டக்காரர்களைப் பாதுகாக்க ராணுவத் தலையீடு இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், 

    ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்! கொலைகாரர்கள் மற்றும் சித்திரவதை செய்பவர்களின் பெயர்களைச் சேமித்து வையுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள்.

    போராட்டக்காரர்களின் கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்துகொண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • ஈரானுடன் வர்த்தகம் செய்து கொள்ள மற்ற நாடுகளுக்கு டிரம்ப் கெடுபிடி.
    • மீறி வர்த்தகம் செய்தால் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

    இதற்கிடையே, ஈரானுடன் வர்த்தகம் செய்து கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதில் சீனா பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனா ரஷியா, வெனிசுலா, ஈரானிடம் ஆகிய நாடுகளிடம் இருந்து மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தது.

    தற்போது வெனிசுலா அதிபரை கைது செய்து, வெனிசுலா எண்ணெய்யை அமெரிக்கா வசம் எடுத்துக் கொள்ள டிரம்ப் முயற்சி செய்கிறார். இந்த நிலையில் ஈரானிடம் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால், சீனாவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் "வர்த்தக வரிப் போரில் வெற்றியாளர்கள் என்று யாருமில்லை. மேலும் சீனா தனது சொந்த நியாயமான மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பாதுகாக்கும்" என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    வெனிசுலா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் சீனா ஒரு நாளைக்கு 4 லட்சம் பேரல் என்ற வகையில் எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

    ஈரானிடம் இருந்து 1.38 பேரல் கொள்முதல் செய்துள்ளது. இது ஈரானின் எண்ணெயில் இருந்து 80 சதவீதம் எனக் கூறப்படுகிறது.

    • பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.
    • பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் துப்பாக்கியால் சுடவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 2000-த்தை கடந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • வன்முறையால் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது.
    • ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.

    பொருளாதார நெருக்கடியால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதில் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 600 க்கும் ஏற்பட்டோர் கொல்லப்பட்டுள்னர். 

    இந்த நிலையில் "ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளன.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அவை வன்முறையாக மாறக்கூடும்.

    இதனால் ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைச் சாராத வகையில் ஈரானை விட்டு வெளியேறுவதற்கான ஒரு திட்டத்தை வைத்திருங்கள்.

    உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான கட்டிடத்தை கண்டறிந்து அங்கு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஈரான் போராட்டத்தை ஆதரித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும் என கூறியிருந்தார்.  

    • இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாக கிடைக்கிறது.
    • தனிமையில் வசிக்கும் சுமார் 200 மில்லியன் சீன மக்களின் தனிமை மற்றும் பாதுகாப்பு கவலையைப் போக்குவதால் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    'தனிமை' தற்போது பலரது வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. யாருமே இல்லை என்பதே தனிமை என்றநிலை மாறி, எல்லோரும் இருந்தும், யாருடன் இணையாமல் இருப்பது என்பது இப்போது பலருக்கும் இயல்பான ஒன்றாக உள்ளது. பல காரணங்களால் இந்த தனிமை ஒருவரை ஆட்கொண்டுள்ளது. பெற்றோரை பிரிந்து வெளியூர்களில் வேலை செய்பவர்கள், படிப்பவர்கள், காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை என பல்வேறு காரணங்களால் பலரும் அதிகம் தனிமையில் இருக்கின்றனர், தனிமையை விரும்புகின்றனர்.

    உண்மையை சொல்லப்போனால் இந்த தனிமை வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் எழுவது, வேலையை பார்ப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்பதே சுழற்சியாக உள்ளது. எந்த சிந்தனையும் மனதில் எழுவதும் இல்லை, ஓடுவதும் இல்லை. மேலும் குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ, தெரிந்தவர்களிடமோ எந்த உரையாடல்களும் இல்லை. யாராவது அழைத்தால் பேசுவது, இல்லையேல் அப்படியே சுழற்சியை தொடர்வது. இதனால் பலரது பெற்றோர்களும், அன்புக்குரியவர்களும் அச்சம் கொள்கின்றனர்.

    இந்நிலையில், நாம் யாரிடமும் தொடர்புகொள்ளாவிட்டாலும், நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்பதை நமக்கு வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சீனாவில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Are You Dead? (சீன மொழியில்: Si Le Me) என்ற செயலி சீனாவில் இந்தாண்டின் தொடக்கத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரு பாதுகாப்பு சார்ந்த மொபைல் செயலி ஆகும். தனிமையில் வசிப்பவர்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    என்ன செய்யவேண்டும்?

    பயனர்கள் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்தச் செயலியைத் திறந்து, தாங்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும். பயனர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு (48 மணிநேரம்) எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால், செயலி தானாகவே, அந்த பயனர் பதிவு செய்துள்ள அவசரத் தொடர்பு எண்ணுக்கு (Emergency Contact) மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பும்.

    தனிமையில் வசிக்கும் சுமார் 200 மில்லியன் சீன மக்களின் தனிமை மற்றும் பாதுகாப்பு கவலையைப் போக்குவதால் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாக (Paid App) கிடைக்கிறது. இதன் விலை சுமார் 8 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.100 முதல் ரூ.115 வரை). சர்வதேச சந்தையில் இது Demumu என்ற பெயரில் கிடைக்கிறது.

    சீனாவில் மக்கள் தனியாக வசிப்பது அதிகரித்துள்ள நிலையில் இந்த செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலியின் பெயர் பேசுபொருளாகியுள்ளது.'அட பாவி நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா' எனும் தமிழ்பட காமெடி போல "Are You Dead?" நீங்கள் இறந்துவிட்டீர்களா? என குறுஞ்செய்தி வருவது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

    இதனையடுத்து பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க, "Are You Dead?" என்ற செயலியின் பெயரை "Are You Okay?" அல்லது "Are You Alive?" என மாற்றவும், முதியவர்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட புதிய வசதிகளைச் சேர்க்கவும் அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    • சமீர் தாஸ் என்ற 28 வயது ஆட்டோ ஓட்டுனரை கும்பல் ஒன்று வழிமறித்தது.
    • இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    வங்கதேசத்தில் மாணவர் அமைப்பு தலைவர் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின.

    கொல்லப்பட்டவர் இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தவர் என்பதால் அவரது கொலையை கண்டித்து நடந்த போராட்டங்களில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    மேலும் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

    இந்நிலையில் வங்கதேசத்தின் சிட்டகாங்கில் சமீர் தாஸ் என்ற 28 வயது ஆட்டோ ஓட்டுனரை கும்பல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர்.

    முதற்கட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறத. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். 

    • இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
    • பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது.

    சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022-ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    வெய் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார்.

    இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.

    அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார்.

    பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

    சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022-ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தபோதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

    குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தபோதே அவர் ராணுவ ரசிகசியங்களை கசிய விட்டுள்ளார். வெய் போலவே  ஜாவோ என்ற மற்றொரு அமெரிக்க கடற்படை வீரரும் சீனாவுக்கு உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.  

    • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
    • சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான பர்திசை சேர்ந்த சுல்தானி(வயது 26) என்பவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கடந்த 11-ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    சுல்தானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக ஒரு மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் பங்கேற்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார். 

    • சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
    • பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

    இது 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்காத இந்தியா, இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகிறது.

    சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

    இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டுமானத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு சீனா மேற்கொண்டு வரும் மாற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது" என்று தெரிவித்தது.

    இது தொடர்பாகச் சீனாவிடம் தூதரக ரீதியாக இந்தியா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கே சொந்தம் என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார்.

    ஏற்கனவே லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏறி அருகில் கடந்த சில ஆண்டுகளாக சீனா கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  

    ×