என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர் யு டெத்?"

    • இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாக கிடைக்கிறது.
    • தனிமையில் வசிக்கும் சுமார் 200 மில்லியன் சீன மக்களின் தனிமை மற்றும் பாதுகாப்பு கவலையைப் போக்குவதால் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    'தனிமை' தற்போது பலரது வாழ்விலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. யாருமே இல்லை என்பதே தனிமை என்றநிலை மாறி, எல்லோரும் இருந்தும், யாருடன் இணையாமல் இருப்பது என்பது இப்போது பலருக்கும் இயல்பான ஒன்றாக உள்ளது. பல காரணங்களால் இந்த தனிமை ஒருவரை ஆட்கொண்டுள்ளது. பெற்றோரை பிரிந்து வெளியூர்களில் வேலை செய்பவர்கள், படிப்பவர்கள், காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை என பல்வேறு காரணங்களால் பலரும் அதிகம் தனிமையில் இருக்கின்றனர், தனிமையை விரும்புகின்றனர்.

    உண்மையை சொல்லப்போனால் இந்த தனிமை வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் எழுவது, வேலையை பார்ப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்பதே சுழற்சியாக உள்ளது. எந்த சிந்தனையும் மனதில் எழுவதும் இல்லை, ஓடுவதும் இல்லை. மேலும் குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ, தெரிந்தவர்களிடமோ எந்த உரையாடல்களும் இல்லை. யாராவது அழைத்தால் பேசுவது, இல்லையேல் அப்படியே சுழற்சியை தொடர்வது. இதனால் பலரது பெற்றோர்களும், அன்புக்குரியவர்களும் அச்சம் கொள்கின்றனர்.

    இந்நிலையில், நாம் யாரிடமும் தொடர்புகொள்ளாவிட்டாலும், நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்பதை நமக்கு வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சீனாவில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Are You Dead? (சீன மொழியில்: Si Le Me) என்ற செயலி சீனாவில் இந்தாண்டின் தொடக்கத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரு பாதுகாப்பு சார்ந்த மொபைல் செயலி ஆகும். தனிமையில் வசிப்பவர்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    என்ன செய்யவேண்டும்?

    பயனர்கள் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்தச் செயலியைத் திறந்து, தாங்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும். பயனர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு (48 மணிநேரம்) எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால், செயலி தானாகவே, அந்த பயனர் பதிவு செய்துள்ள அவசரத் தொடர்பு எண்ணுக்கு (Emergency Contact) மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பும்.

    தனிமையில் வசிக்கும் சுமார் 200 மில்லியன் சீன மக்களின் தனிமை மற்றும் பாதுகாப்பு கவலையைப் போக்குவதால் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாக (Paid App) கிடைக்கிறது. இதன் விலை சுமார் 8 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.100 முதல் ரூ.115 வரை). சர்வதேச சந்தையில் இது Demumu என்ற பெயரில் கிடைக்கிறது.

    சீனாவில் மக்கள் தனியாக வசிப்பது அதிகரித்துள்ள நிலையில் இந்த செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலியின் பெயர் பேசுபொருளாகியுள்ளது.'அட பாவி நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா' எனும் தமிழ்பட காமெடி போல "Are You Dead?" நீங்கள் இறந்துவிட்டீர்களா? என குறுஞ்செய்தி வருவது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

    இதனையடுத்து பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க, "Are You Dead?" என்ற செயலியின் பெயரை "Are You Okay?" அல்லது "Are You Alive?" என மாற்றவும், முதியவர்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட புதிய வசதிகளைச் சேர்க்கவும் அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ×