செய்திகள்

போலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்

Published On 2019-01-24 10:14 GMT   |   Update On 2019-01-24 10:14 GMT
இணையதளத்தில் போலி செய்திகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வரும் நிலையில், இதனை கண்டறிந்து தெரிவிக்கும் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. #Microsoft



ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் இதர நிறுவனங்களுக்கு போலி செய்திகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் போலி செய்திகளை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

அந்த வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் போலி செய்திகளை கண்டறிந்து அவற்றை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க புதிய வசதியை உருவாக்கி இருக்கிறது. இதற்கென மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நியூஸ்கார்டு (NewsGuard)  எனும் அம்சத்தினை தனது எட்ஜ் மொபைல் பிரவுசரில் வழங்கியிருக்கிறது.



புகைப்படம் நன்றி: RACHEL KRAUS

மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்திருக்கும் புதிய அம்சம் போலி செய்திகளை கண்டறிந்து தெரிவிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெக்-கிரன்ச் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திற்கான எட்ஜ் பிரவுசரில் நியூஸ்கார்டு எனும் அம்சம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் தானாக செயல்படுத்தப்படவில்லை. எனினும், மைக்ரோசாஃப்ட் தனது வாடிக்கையாளர்களை செட்டிங் மெனு சென்று இதனை ஆக்டிவேட் செய்யக் கோருகிறது. செயலியினுள் நியூஸ் ரேட்டிங் எனும் அம்சத்தை பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தினை எப்போது வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.


புகைப்படம் நன்றி: RACHEL KRAUS

தற்சமயம் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்படலாம். போலி செய்திகளை கண்டறிவதோடு மட்டுமின்றி, இந்த சேவையை கொண்டு வலைதளத்தின் நற்மதிப்பை பறைசாற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர் பயன்படுத்தும் வலைதளங்களின் தரவுகளை மதிப்பீடு செய்து தெரிவிக்கும்.

"பாதுகாப்பான பிரவுசிங் என்பது வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல்களை வழங்குவது தான். அந்த வகையில் நியூஸ்கார்டு சேவையின் மூலம் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் செயலிகளில் சரியான தகவல்களை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது" என மைக்ரோசாஃப்ட் நிறுவன மேலாளர் மார்க் வாடியர் தெரிவித்தார்.
Tags:    

Similar News