தமிழ்நாடு

சாதிவாரி புள்ளி விபரம் எடுக்க வேண்டும்- வைகோ அறிக்கை

Published On 2022-11-09 08:04 GMT   |   Update On 2022-11-09 08:04 GMT
  • விடுதலை பெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை.
  • கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி) ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1931-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் அந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாகப் பெறுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விபரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓ.பி.சி. ஒருங்கிணைப்பு குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதியரசர்கள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, ஓ.பி.சி. பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு" என்று ஒன்றிய பா.ஜனதா அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஓ.பி.சி. இடஒதுக்கீட்டு பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளி விபரங்களையும் எடுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News