தமிழ்நாடு

அரசு பஸ்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- சீமான் வலியுறுத்தல்

Published On 2022-07-12 06:34 GMT   |   Update On 2022-07-12 08:07 GMT
  • அரசுப் பேருந்துகளைப் படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
  • பயணிகள் அதிகம் இல்லாத சிறிய கிராமங்களுக்குப் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் பேராபத்து ஏற்படக்கூடும்.

சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசுப் பேருந்துகளைப் படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஊழல் மற்றும் அரசின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மக்கள் சேவை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

முதற்கட்டமாக சென்னையில் 1000 பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வரும் செய்திகள் பொது மக்களிடத்திலும், போக்கு வரத்து ஊழியர்களிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்துத் துறையைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவை லாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்பதால் பயணிகள் அதிகம் இல்லாத சிறிய கிராமங்களுக்குப் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் பேராபத்து ஏற்படக்கூடும்.

மேலும், விழாக்காலங்களில் கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவதுபோல், தனியார் பேருந்து முதலாளிகள் தங்கள் விருப்பம்போல் பேருந்து கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் வழி ஏற்படுத்துவதோடு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களின் பணிப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். அதுமட்டுமின்றி, மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தற்போது வழங்கப்பெறும் கட்டண சலுகைகளும் நிறுத்தப்படவும் வாய்ப்பு ஏற்படும்.

எனவே, அரசுப் பேருந்துகளை தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைத்து, அதில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து லாபத்தில் இயங்கச் செய்ய உரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News