தமிழ்நாடு

வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி கட்டணம் ரூ.30 ஆயிரமாக குறைப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-07-29 07:39 GMT   |   Update On 2022-07-29 09:10 GMT
  • வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்களில் 7.5 சதவீதம் பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்பட்டது.
  • தேசிய மருத்துவ கவுன்சில் கவனத்துக்கு கொண்டு சென்று 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்து திரும்பிய பிறகு இன்டன்ஷிப் பயிற்சி பெற வேண்டும். அதற்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வசூலிக்கிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை ரூ.2 லட்சம் வசூலிக்கிறது. ஆக மொத்தம் பயிற்சி பெற ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு வெளிநாடுகளில் படித்து வரும் மாணவர்கள் இங்கு பெரிய அளவில் பணம் கட்ட முடியாததால்தான் கடுமையான குளிர் போன்ற சிரமங்களையெல்லாம் தாங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பயிற்சி பெற ரூ.5 லட்சம் என்பது மிக அதிகமான கட்டணமாக இருப்பதாக அரசிடம் முறையிட்டார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மருத்துவ பல்கலைக்கழகம் வசூலித்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை குறைத்து வெறும் ரூ.30 ஆயிரம் மட்டும் செலுத்த உத்தரவிடப்பட்டது.

இதே போல் மக்கள் நல்வாழ்வுத் துறை வசூலித்து வந்த ரூ.2 லட்சமும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆக இனி வெளிநாட்டில் படித்து இங்கு பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் ரூ.30 ஆயிரம் மட்டும் கட்டினால் போதும்.

அதேபோல் வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்களில் 7.5 சதவீதம் பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்பட்டது.

இப்போது அதையும் தேசிய மருத்துவ கவுன்சில் கவனத்துக்கு கொண்டு சென்று 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News