தமிழ்நாடு

மக்களுக்கு பயன்படுத்த நீரேற்று திட்டம் வேண்டும்- மத்திய அரசுக்கு அமைச்சர் கே.என்.நேரு கோரிக்கை

Published On 2022-09-12 10:53 GMT   |   Update On 2022-09-12 10:53 GMT
  • காவிரி ஆற்றில் 300 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
  • அதே போன்று பாலாறு தென்பெண்ணை ஆறு போன்ற நீர் நிலைகளில் நீரானது கடலில் வீணாக கலக்கிறது.

சென்னை:

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் மேலாண்மைக்கான தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கினை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் திட்டங்களை முன்னிலைப்படுத்தி 2031-ம் ஆண்டு வரையிலான தொலை நோக்குத் திட்டத்தை செயல்படுத்த முக்கிய அம்சங்களை உருவாக்கியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்தின் இலக்குகளை அடைவதற்கு கழிவுநீர் அமைப்பு மிகவும் முக்கியமானது என்றாலும், குடிநீரை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கினாலும், கழிவு நீர் அமைப்பின் முக்கியத்துவத்தை புறக்கணிக்க முடியாது. அதாவது நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் நீரில் 80 சதவீதம் கழிவு நீராக வெளியேறும்.

இந்த கழிவு நீர் முறையாக சேகரிக்கப்படாமல் மறுசுழற்சி மேற்கொள்ளாமல் அப்புறப்படுத்தப்பட்டால் கடுமையான நீர்மாசு பிரச்சினைகளை உருவாக்கும்.

இதனை கருத்தில் கொண்டு தான் தமிழக அரசு கழிவுநீர் அமைப்பில் இருந்து வெளியேறும் நீரில் இருந்து மறுசுழற்சி பயன்பாடு போன்ற வழிமுறைகளை ஆராய்ந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நகர்புற வளர்ச்சி என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜல் ஜீவன் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட உரிய கால அவகாசத்தினை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.

காவிரி ஆற்றில் 300 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதே போன்று பாலாறு தென்பெண்ணை ஆறு போன்ற நீர் நிலைகளில் நீரானது கடலில் வீணாக கலக்கிறது. இதனை மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் நீரேற்றும் திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Tags:    

Similar News