தமிழ்நாடு

சின்னவர் என்று அழைக்கும்படி நானாக சொல்லவில்லை: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2022-07-03 06:01 GMT   |   Update On 2022-07-03 06:35 GMT
  • தி.மு.க.வில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை.
  • தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மாவட்ட செயலாளர்களும் நிறைய நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

சென்னை:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா ஆதம்பாக்கம் கே.ஆர். ஜெ.கார்டனில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் சந்திரன், வடக்கு பகுதி செயலாளர் குணாளன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு 1600 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது நான் மிகவும் ராசிக்காரன் என்று சொன்னார். அதிலே எனக்கு நம்பிக்கை கிடையாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நான் சென்று பிரசாரம் செய்ததால் தான் வெற்றிபெற்றது போல் பேசினார்கள். அந்த வெற்றி முத்தமிழறிஞர் கலைஞருக்கு கிடைத்த வெற்றி. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. உங்களை போன்ற கழகத்தினரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கு தேதி வாங்கும் போது 1000 பேருக்கு பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் பிறகு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அச்சடித்துக் கொண்டு வரும்போது 1250 பேருக்கு பொற்கிழி வழங்கப்படும் என்று சொன்னார். இப்போது நான் நிகழ்ச்சிக்கு காரில் வரும்போது 1600 பேருக்கு பொற்கிழி வழங்க இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல எந்தெந்த ஒன்றியத்தில் எவ்வளவு பொற்கிழி வாங்குகிறார்கள். அவர்கள் வகித்த பதவிகள், அவர்களது ஆரம்பகால உறுப்பினர் கார்டு முதற் கொண்டு விவரமாக புத்தகம் மாதிரி தயாரித்து வைத்துள்ளார். இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மாவட்ட செயலாளர்களும் நிறைய நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

தி.மு.க.வில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. நான் தான் உங்கள் அன்புக்கு அடிமை. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, என்னை சின்னவர் என்று அழைக்க சொன்னதாக கூறினார். இருக்கிற பிரச் சினை போதாதா? நான் அப்படி சொல்லவே இல்லை.

என்னைப்பற்றி நிறைய கூட்டங்களில் பேசும்போது, 'மூன்றாம் கலைஞர்' 'இளம் கலைஞர்', 'சின்ன கலைஞர்' இப்படி என் மீதுள்ள அன்பு காரணமாக இப்படி பேசுகிறார்கள். அவர்கள் என்னை பெருமைபடுத்துவதாக நினைத்துக் கொண்டு கலைஞரை சிறுமைப்படுத்துறாங்க. கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான். ஒரே கலைஞர் தான்.

இனி எத்தனை பேர் பிறந்திருந்தாலும் கலைஞருக்கு நிகர் யாராலும் பிறக்க முடியாது. எனவே ஒரே கலைஞர் தான். ஒரே தலைவர்தான். அதைத் தான் நான் சொன்னேன். இங்கு இருக்கிற உங்களோட வயது, உங்களுடைய அனுபவம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது நான் ரொம்ப சின்னவன்.

அதனால் என்னை சின்னவர் என்று கூப்பிடுங்கள் என்று சொன்னேனே தவிர நானாக போய் எல்லோரும் என்னை 'சின்னவர்' என்று கூப்பிடுங்கள், 'சின்னவர்' என்று கூப்பிடுங்கள் என்று சொன்னது போல் பேசிக்கிட்டு இருக்காங்க, நீங்களே என்னை புரிஞ்சுக்கல.

இது பொற்கிழி வழங்கும் விழா, அதுமட்டு மின்றி ஓராண்டு ஆட்சி சாதனை விளக்க விழா. நம் தலைவர் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு மக்களும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் இளைஞரணி செயலாளராக பொறுப் பேற்று 3 வருடம் முடிந்து 4-வது வருடத்திலே அடியெடுத்து வைக்கிறேன். அப்போது கூட நான் காரில் வரும் போது என்னுடைய இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் செந்தில் சொல்லும் போது, சார் இந்த 3 வருடத்தில் நாம் நிறைய பண்ணியிருக்கோம் என்றார்.

நான் அதை காதில் வாங்கிக்கவே இல்லை. நாம் இன்னும் செய்ய வேண்டியது அதிகம் இருக்கிறது என்ற எண்ணம் மட்டும் தான் என் மனதில் ஓடிகிட்டு இருந்தது. இந்த 3 வருடத்தில் பெரிதாக செய்துவிட்டோம் என்ற எண்ணம் வரலை. இன்னும் நாம் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.

நான் பெரியாரை நேரில் பார்த்தது கிடையாது. பேரறிஞர் அண்ணாவை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் இங்குள்ள மூத்த முன்னோடிகள் நீங்கள் நேரில் பார்த்திருப்பீர்கள்.

நான் பார்த்தது எல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரையும், இனமான பேராசிரியர் தாத்தாவையும், நம்முடைய தலைவரையும் தான் பார்த்திருக்கிறேன். இவர்களை பார்த்து தான் நான் அரசியலை கற்றுக் கொள்கிறேன்.

நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு செல்லுகின்ற இட மெல்லாம் நன்கொடை வாங்கி கிட்டத்தட்ட இந்த 3 வருடங்களில் மட்டும் இளைஞரணி சார்பில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளோம். அதை இளைஞரணி அறக்கட்டளையில் வைப்பு தொகையாக வைத்து வருகிற வட்டியை கழக மூத்த முன்னோடிகளுக்கும், இளைஞரணி தம்பிமார்களுக்கும், அவர்களது கல்வி செலவு, மருத்துவ செலவுக்கு உதவி வருகிறோம்.

உங்களுக்கு என்ன தேவை என்றாலும் இளைஞரணி அலுவலகமான அன்பகத்துக்கு ஒரு கடிதம் கோரிக்கையாக தந்தால் அதை ஆய்வு செய்து இளைஞரணி சார்பாகவும் உங்களுக்கு உதவிகள் வந்து சேரும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும் போது கூறியதாவது:-

இன்றைக்கு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் தி.மு.க.வில் கலைஞர் உயிரோடு இருக்கும்போதே ஒரு நல்ல நேர்மையான அற்புத தலைவரான தளபதியை நமக்கு அடையாளம் காட்டி தந்துள்ளார். இன்று அவரது வழியில் கழகம் கம்பீரமாக நடக்கிறது.

என்றைக்கும் தலைவர் பின்னால் தான் இந்த இயக்கம் பீடுநடை போடும். இந்த மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை. கட்சிக்காரனுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அவனை காப்பாற்ற தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிகர் அவர்தான்.

இளைஞரணி செயலாளர் உதயநிதி பொறுப்பேற்று 3 வருடம் முடிந்துள்ளது. இந்த 3 ஆண்டில் மாவட்டத்துக்கு 1 லட்சம் உறுப்பினர் வீதம் சேர்க்க சொன்னார். அந்த வகையில் 75 லட்சம் இளைஞர்களை கொண்ட இயக்கமாக இளைஞரணி பீடுநடை போடுகிறது.

கடந்த எம்.பி. தேர்தலில் 39 இடங்களில் வெற்றிபெற உதயநிதியும் உறுதுணையாக இருந்தார். வர இருக்கிற எம்.பி. தேர்தலில் 40 இடங்களில் ஜெயிக்க பாடுபடுவோம். நம் பணியை இன்னும் வேகப் படுத்துவோம்.

நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 75 சதவீ தத்தை நிறைவேற்றிவிட்டார். இதனால் அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிக்காரர்கள் வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ஏதோ பிதற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News