தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு: விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2024-01-01 05:44 GMT   |   Update On 2024-01-01 05:44 GMT
  • கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
  • கடந்த காலங்களில் தரமற்ற பொருட்களும் இடம் பெற்றது போல் மீண்டும் நடைபெறக்கூடாது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பானது விவசாயிகளின், பொது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். பொங்கல் தொகுப்பில் குறைந்த பட்சம் ரூ. 1,500 மற்றும் முழு கரும்பு ஒன்று அவசியம் இடம் பெற வேண்டும். குறிப்பாக இயற்கை சீற்றத்தால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழை, பெரு வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப இந்த வருடப் பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பை சற்று கூடுதலாக கொடுக்க வேண்டும்.

கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும். பொங்கல் தொகுப்பில் உள்ளவை தரமானதாக, பயனுள்ள வகையில் இருப்பதை முன்னதாகவே தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தரமற்ற பொருட்களும் இடம் பெற்றது போல் மீண்டும் நடைபெறக்கூடாது. மேலும் தமிழக அரசு, பொங்கல் தொகுப்பை உடனடியாக அறிவித்து, அதனை முன்னேற்பாடாக வாங்கி, இருப்பில் பாதுகாப்பாக வைத்து, பொங்கலுக்கு முன்னதாக கொடுக்க வேண்டும். தமிழக அரசு, தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஏதுவாக பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News