தமிழ்நாடு

வெங்கல் அருகே தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி- உரிமையாளர் தப்பி ஓட்டம்

Update: 2022-10-03 10:45 GMT
  • ஜோதி தனது நிறுவனத்தை மூடிவிட்டு திடீரென தலைமறைவானார். அவரது செல்போனிலும் பணம் கட்டியவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை
  • மறியல் போராட்டத்தால் திருநின்றவூர் -பெரியபாளையம் நெடுஞ்சாலையில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்:

வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி.ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் ஏஜென்சி நிறுவனம் நடத்தி தீபாவளி சீட்டு நடத்தி வந்தார்.

இதற்காக கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிட்டார். மாதம் ரூ.1000 செலுத்தினால் சீட்டு முடியும்போது 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும், மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் மளிகை பொருட்களும் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இதனால் தாமரைபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு மற்றும் குறுவாயில் உட்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தீபாவளி சீட்டுக்கு பணம் கட்டி வந்தனர். பணம் வசூலிக்க ஒவ்வொரு கிராமங்களிலும் தனியாக ஏஜென்ட்டுகள் நியமித்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பணம் கட்டியவர்கள் தங்களுக்கு உரிய பொருட்கள் குறித்து உரிமையாளர் ஜோதியிடம் கேட்டனர். அப்போது அவர் சில நாட்களில் பொருட்கள் அனைத்தும் வந்து விடும் உடனே அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே ஜோதி தனது நிறுவனத்தை மூடிவிட்டு திடீரென தலைமறைவானார். அவரது செல்போனிலும் பணம் கட்டியவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தீபாவளி சீட்டுக்கு பணம் கொடுத்து ஏமாந்த கிராமமக்கள் ஏராளமானோர் இன்று காலை தாமரை பாக்கம் கூட்டுச்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் திருநின்றவூர் -பெரியபாளையம் நெடுஞ்சாலையில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News