தமிழ்நாடு

இறந்த கால்நடைகளை அகற்றி தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published On 2023-12-24 09:30 GMT   |   Update On 2023-12-24 09:30 GMT
  • தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
  • பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வெள்ளம் பாதித்துள்ள மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடியில் ஏழு நாட்கள் ஆகியும் இன்னும் தண்ணீர் வடியாததால் பல பகுதிகளில் தேங்கிய மழை நீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. இதனால், கடும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்த பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள ராட்சத மோட்டார்களை உடனடியாகக் கொண்டு சென்று தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும்.

இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தற்போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளை நிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்றவற்றை உரிய முறையில் அகற்றி, நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் துவங்கிட இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News