தமிழ்நாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டு பந்தல் அலங்கார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நாமக்கல் வருகை

Published On 2022-07-01 10:14 GMT   |   Update On 2022-07-01 10:14 GMT
  • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலையில் கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
  • இவ்விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 12 மணி அளவில் நாமக்கல் மாவட்ட நுழைவு பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் வழியாக நாமக்கல்லுக்கு வருகிறார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் உள்ள பொம்மைகுட்டை மேட்டில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாடு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக பொம்மைகுட்டை மேட்டில் 400 அடி நீளம் மற்றும் 240 அடி அகலத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தலில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காலையில் கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இவ்விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 12 மணி அளவில் நாமக்கல் மாவட்ட நுழைவு பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் வழியாக நாமக்கல்லுக்கு வருகிறார். பின்னர் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

இதையடுத்து மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் நாமக்கல்லுக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு ராசாம்பாளையம் சுங்கசாவடியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை தி.மு.க.வினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இதனால் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகில் இருந்து விழா நடைபெறும் மேடை வரை என வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று காலையில் நாமக்கல் செல்லப்பம்பட்டி அரசு பள்ளியில் போலீசார் எந்த எந்த பகுதியில் பணிமேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், அமைச்சர்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என அனைவரும் அமர தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உணவு சாப்பிடும் வகையில் மாநாட்டு திடலில் பெரிய அளவிலான ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News