தமிழ்நாடு

தியேட்டர்கள், கடைகளில் முக கவசம் கட்டாயம்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Published On 2022-07-04 10:12 GMT   |   Update On 2022-07-04 10:12 GMT
  • கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
  • பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகஅளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளிைய தவறாமல் பின்பற்ற வேண்டும்.

எனவே வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்கு, துணி கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் ஒவ்வொரு தனி நபரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வெளியில் செல்லும் பொழுது தவறாமல் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News