தமிழ்நாடு

ஓபிஎஸ் மீது சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-08-11 07:23 GMT   |   Update On 2022-08-11 07:23 GMT
  • ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், போலீசாரும் செயல்படுகின்றனர்.
  • மனுதாரர் சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் ரியாஸ் முகமது ஆஜராகி வாதிட்டார்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ந் தேதி வானகரத்தில் நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வர தீர்மானம் இயற்றப்பட்டது.

அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். இதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் அங்கு மிகப்பெரிய கலவரம் நடந்தது. பின்னர் அதிமுக அலுவலகம் மூடப்பட்டது. அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச்சென்று விட்டதாக குற்றச்சாட்டு இருந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் திருட்டு புகார் செய்யப்பட்டது.

போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்காததால் இந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார்.

அதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், போலீசாரும் செயல்படுகின்றனர். ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்சினையாக கொண்டு வருகின்றனர்.

எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சி.வி.சண்முகம் சார்பில் வக்கீல் ரியாஸ் முகமது ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, சி.வி. சண்முகம் கொடுத்த புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், இந்த மனுவுக்கு பதில் மனுவும் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News