தமிழ்நாடு

எங்களுக்கு வேற வேலை இல்லையா? அதிமுக வழக்குகளுக்கு தனி அமர்வு கேட்டதால் நீதிபதி கடும் கண்டனம்

Published On 2022-08-24 16:59 GMT   |   Update On 2022-08-24 16:59 GMT
  • ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில் ஒரே அமர்வு அமைக்க கோரிக்கை
  • அதிமுக வழக்குகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் பட்டியலிட நீதிபதி உத்தரவு

சென்னை:

அதிமுக நிர்வாகம் மற்றும் பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில் ஒரே அமர்வு விசாரிக்கும் வகையில் இந்த சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் என மனுதாரர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அமர்வு தொடர்பாக மனு அளிக்கப்பட்டிருப்பது தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதுதான் வேலையா? தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என்று நினைக்கிறீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அதிமுக வழக்குகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் தனக்கு முன்பாக பட்டியலிடுமாறு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News