அ.தி.மு.க.வை கைப்பற்ற திரைமறைவு சூழ்ச்சிகள்- மவுனம் காக்கும் எடப்பாடி பழனிசாமி
- ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
- எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான கோவை ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது.
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்குள் எழுந்த அதிகார சண்டைகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு போராடி கட்சியை தன் வசப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
பெருவாரியான தொண்டர்களும் அவரது தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தனித்தனியாக செயல்பட்டாலும் அ.தி.மு.க.வை கைப்பற்ற சந்தர்ப்பங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை.
இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடனான உறவை எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டார்.
சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்ட ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் பா.ஜனதா வுடன் கை கோர்த்தார்கள். ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரனும் பா.ஜனதா ஆதரவுடன் போட்டியிட்டார்கள்.
இதற்கிடையில் அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா காலத்தைபோல் தலைமைக்கு பயப்படும் நிலையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை. கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்த தலைவர்களாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்க மணி போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளுக்கு உடன்படவில்லை.
அதன்படி கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமியின் முடிவை முழு மனதாக அவர்கள் ஏற்கவில்லை. எனவே தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வில்லை என்ற புகார் எழுந்தது.
எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான கோவை ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. அங்கு போட்டியிட்ட தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை தோற்கடிப்பதில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வரிந்து கட்டியது.
ஆனால் பா.ஜனதாவை தோற்கடித்து தி.மு.க. வெற்றி பெறுவதை எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள் விரும்பவில்லை. எனவே தேர்தல் பணியில் தீவிரம் காட்டவில்லை. அண்ணாமலைக்கு ஆதரவாக வேலுமணி ஆதரவாளர்கள் வேலை பார்ப்பதாகவும் கூறப்பட்டது.
இப்போது தேர்தல் முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் அடுத்தக் கட்ட அரசியல் நகர்வுகள் வேகம் பிடித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கத்தை, எஸ்.பி.வேலு மணி ரகசியமாக சந்தித்து பேசி இருக்கிறார்.
ஒரு காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல காரணமாக இருந்தது எஸ்.பி.வேலுமணிதான்.
டெல்டா மாவட்டங்களில் தனக்கு தெரியாமல் கட்சி நிர்வாகிகளை எஸ்.பி.வேலுமணி மாற்றியதால்தான் வைத்திலிங்கம் கடுப்பானார். அதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தும் பலன் இல்லாததால்தான் வைத்திலிங்கம் வெளியேறினார்.
இப்படி எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்போது சந்தித்தது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கூறும்போது, அன்றைய நிலைமை வேறு. இன்றைய நிலைமை வேறு என்றனர்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மூத்த நிர்வாகிகளை வைத்திலிங்கம் மூலம் ஒன்று திரட்ட ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாகவும் அதன் பின்னணியில்தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவு வந்ததற்கு பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் திட்டம் தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.
அ.தி.மு.க.வுக்குள் நடக்கும் இந்த பனிப்போரை அமைச்சர் ரகுபதி சுட்டிக்காட்டினார். அவர் கூறும்போது, "தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை செங்கோட்டையன் தலைமையில் செல்லப் போகிறதா? வேலுமணி தலைமையில் செல்லப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மிகப்பெரிய பிளவு உருவாக வாய்ப்புகள் அதிகம் என்றார்.
ஆனால் இந்த பிரச்சினை எதையும் கண்டு கொள்ளாதது போல் எடப்பாடி பழனிசாமி மவுனமாகவே இருக்கிறார்.
இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
நடப்பது எல்லாமும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன் பின்னணியும் அவருக்கு புரியும். அவராக அவசரப்பட்டால் நிலைமை வேறுவிதமாக மாறும். எனவே அவர்களாகவே என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும். அவர்கள் வெளியேறினால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறினார்.