தமிழ்நாடு

இதற்கு போராட்டம் நடத்த பாஜகவுக்கு தைரியம் இருக்கிறதா? அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்

Published On 2022-08-06 13:23 GMT   |   Update On 2022-08-06 13:23 GMT
  • கோவையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
  • செய்யவேண்டிய பணிகளை குறிப்பிட்டு சொன்னால் அதை செய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது

கோவை:

கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையில் சாலைப்பணிகள் செய்யப்படவில்லை, அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாக கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது:-

வரும் 24ம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு 82000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும், விடுபட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்காக சிறப்பு நிதி வழங்க தயாராக இருக்கிறார். இதற்காக மாநகராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணிகளும் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுப் பிரச்சினைகளுக்காக பாஜகவின் போராட்டம் குறித்து பேசிய செந்தில் பாலாஜி, பாஜகவுக்கு தைரியமும் திறமையும் இருந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலையுயர்வை எதிர்த்து முதலில் போராட்டம் நடத்திவிட்டு, அடுத்தகட்ட பிரச்சனைபற்றி பேசட்டும் என்றார்.

'410 ரூபாய்க்கு விற்ற கேஸ் சிலிண்டர் 1120 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு லிட்டர் 54 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதற்கெல்லாம் பாஜக முதலில் போராட்டம் நடத்தட்டும். மாநில அரசைப் பொருத்தவரை அனைத்து பகுதிகளுக்கும் நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, செய்யவேண்டிய பணிகளை குறிப்பிட்டு சொன்னால் அதை செய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தயாராக இருக்கிறது' என்றார் செந்தில் பாலாஜி

Tags:    

Similar News