தமிழ்நாடு

தமிழ் பெண்களை ஏளனம் செய்வதா?- அமைச்சர்களுக்கு பா.ஜனதா கண்டனம்

Published On 2022-09-29 08:05 GMT   |   Update On 2022-09-29 08:05 GMT
  • தி.மு.க.வினர் அரும்பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்து மக்களுக்கு பணம் கொடுப்பது போன்று இந்த அரசியல் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
  • உண்மையிலேயே தமிழ் பெண்கள் மீது அக்கறை இருந்தால், அரசே மதுவை விற்கும் அவலத்தை நிறுத்த வேண்டும்.

சென்னை:

பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அமைச்சர் துரைமுருகன் நேற்று ஒரு கூட்டத்தில் பேசும்போது, பெண்களுக்கு ரூபாய் 1000 கொடுப்பதாக சொன்னதை சீக்கிரம் நிறைவேற்றி விடுவோம். 'சில்லறை மாற்றி கொண்டிருக்கிறோம்' அம்மாவுக்கும் ஆயிரம், பெண்ணுக்கும் ஆயிரம் என ரூபாய் 2000 கொடுக்கும் ஒரே ஆட்சி இந்த ஆட்சி தான் என்றும், மற்றொரு அமைச்சர் பொன்முடி "ஓசி, ஓசி பஸ்சில் போறீங்க" என பெண்களை கிண்டல் செய்தும் ஏளனமாக பேசி உள்ளார்கள். மேலும், இலவச பேருந்தில் செல்லும் பெண்களை மரியாதைக்குறைவாக நடத்துனர்கள் பேசும் வீடியோ காட்சிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏதோ, தி.மு.க.வினர் அரும்பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்து மக்களுக்கு பணம் கொடுப்பது போன்று இந்த அரசியல் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உண்மையிலேயே தமிழ் பெண்கள் மீது அக்கறை இருந்தால், அரசே மதுவை விற்கும் அவலத்தை நிறுத்த வேண்டும். மதுவினால் பெண்கள் படும் துயரத்தை சொல்லி மாளாது என்பது தெரிந்தும், மது விற்பனையை அதிகரிக்க திட்டமிடுவது தமிழர்களுக்கு, தமிழ் பெண்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம். இவை எல்லாவற்றிற்கும் மேல், மூத்த அமைச்சர்கள் 'ஓசி, ஓசி' என்றும், சில்லறை மாற்றி கொண்டிருக்கிறோம்' என்றும் மக்களை ஏளனம் செய்வது மிக பெரிய கொடுமை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News