தமிழ்நாடு
போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் 25-ந்தேதி முதல் ஒரு வாரம் போராட்டம்

Update: 2022-05-23 08:56 GMT
மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஒரு வார காலம் விழிப்புணர்வு இயக்க போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், சி.பி.ஐ. கட்சியின் விடுதலை அமைப்பு (எம்.எல்.) மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் சென்னையில் இன்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஒரு வார காலம் விழிப்புணர்வு இயக்க போராட்டம் நடத்தப்படுகிறது.

போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு வீடு தோறும் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்படும். 26 மற்றும் 27-ந்தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

27-ந்தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து இருப்பதாக அறிவித்து உள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை பார்த்து பயந்து குறைத்து இருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு முதல் இதுவரை 200 சதவீதம் பெட்ரோல், டீசல்விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெறும் கண் துடைப்புக்காக 6 சதவீதம் குறைத்து இருக்கிறார்கள். இது நிவாரணம் இல்லை.

பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்க வேண்டும். கியாஸ் விலையில் வீடுகளுக்கான சிலிண்டர்களில் ஊஜ்வாலா மட்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை சிலிண்டர்களை 5 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அனைத்து வகையான சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும்.

வட மாநிலங்களில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறிவிட்டது.

இதேபோல அரிசியை கொள்முதல் செய்யாவிட்டால் தமிழகத்தில் ரேசன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக அறிவித்தது. ஆனால் 6 கோடி பேர் வேலை இல்லாமல் உள்ளனர். தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் பஞ்சு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பஞ்சை கொள்முதல் செய்யவில்லை. அதற்கு பதிலாக அதானி, அம்பானி குடும்பத்தினர் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை அவர் பெற்றுக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க சொல்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News