தமிழ்நாடு
மரணம்

கோயம்பேடு அருகே பிரபல வணிக வளாகத்தில் மது விருந்து-என்ஜினீயர் மயங்கி விழுந்து பலி

Update: 2022-05-22 11:39 GMT
கோயம்பேடு அருகே பிரபல வணிக வளாகத்தில் மது விருந்தில் என்ஜினீயர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாநகர்:

கோயம்பேடு அருகே பிரபல வணிக வளாகம் உள்ளது. நேற்று நள்ளிரவு இங்குள்ள 4வது தளத்தில் ஆடல், பாடலுடன் மது விருந்து நடப்பதாக அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருமங்கலம் போலீசார் மற்றும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விரைந்து சென்று கண்காணித்தனர்.

அப்போது வணிக வளாகத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுவிருந்தில் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஏராளமான பெண்களும் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களை உட னடியாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். பலர் போதை மயக்கத்தில் இருந்ததால் அவர்களால் வெளியேற முடியாமல் தள்ளாடியபடி இருந்தனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர்.

அப்போது போதை விருந்தில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்(வயது23) என்பவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை போலீசார் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போதையில் இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்தார். இதனை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறிதுடித்தனர். பிரவீன் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால் இறப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். என்ஜினீயரான பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் போதை விருந்தில் பங்கேற்ற என்ஜினீயர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விருந்தின் போது தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்கப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

போதை விருந்து நடைபெற்ற இடத்தில் இருந்து 844 விலை உயர்ந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இது தொடர்பாக அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிகழ்ச்சி நடத்திய விக்னேஷ் சின்னதுரை, மார்க், பாரத் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

போதை விருந்தில் பங்கேற்க ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1500 ஆகும். இந்த மது விருந்தில் பங்கேற்க வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். அவர்களை மகிழ்விக்க பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல டிஜே நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த போதை விருந்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் என்ஜினீயர்கள் ஆவர். அவர்களை பற்றிய விபரங்களையும் போலீசார் சேகரித்து வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News