தமிழ்நாடு
கேஎஸ் அழகிரி

சென்னையில் நாளை மறுநாள் கவர்னரை கண்டித்து காங்கிரஸ் பேரணி-ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

Update: 2022-04-26 06:55 GMT
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித்தும், பிறகு ஆர்.என்.ரவியும் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால், தமிழக மக்களிடையே கவர்னர்கள் மீது கொந்தளிப்பான எதிர்ப்பு நிலை ஏற்பட்டு வருகிறது. அதனால் தான் சமீபத்தில் மயிலாடுதுறை சுற்றுப்பயணத்தின் போது மக்கள் தன்னெழுச்சியாக கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கவர்னரின் ஜனநாயக விரோதப் போக்கை முற்றிலும் உணர்ந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார். தமிழக முதல்-அமைச்சரின் துணிவுமிக்க இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் மனதார வரவேற்கிறது, பாராட்டுகிறது.

தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை கிடப்பில் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்ற வகையில் வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் முன்னிலையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமாக அமைய இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News