தமிழ்நாடு
தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்உற்பத்தி பாதிப்பு

Published On 2022-04-21 07:09 GMT   |   Update On 2022-04-21 07:09 GMT
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து இன்று 2, 4-வது அலகுகளில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தட்டுப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது சில அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்யாததே தூத்துக்குடி அனல் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்புக்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து குறிப்பிட்ட அளவு நிலக்கரி அனுப்பியது. இதனால் 5 அலகுகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து இன்று 2, 4-வது அலகுகளில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

மீதம் உள்ள 3 அலகுகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக சில கிராமப்புற பகுதிகளில் இரவு நேரத்தில் மட்டும் 8 முறை தலா ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய தவிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News