தமிழ்நாடு
சுதந்திர போராட்ட வீரர்கள் வேடம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்

தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு- மத்திய அரசை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Update: 2022-01-24 10:39 GMT
டெல்லி குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை:

டெல்லி குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்த பாரதியார், வ.உ.சி.சிதம்பரனார், மருதுபாண்டி சகோதரர்கள், வேலுநாச்சியார் உள்ளிட்ட தலைவர்கள் வேடம் அணிந்து பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:-

டெல்லி குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. பாரதியார், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை யார் என்று தெரியாது என்று கூறிய மத்திய அரசு அதிகாரிகளுக்கும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்.

பொதுமக்களுக்கு இதனை தெரியப்படுத்தும் வகையில் தலைவர்கள் வேடம் அணிந்து போராட்டம் நடத்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோல் நடைபெறாமல் அனைத்து மாநிலங்களின் சார்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளுக்கும் குடியரசு தின விழாவில் அனுமதி வழங்க வேண்டும். அப்போது தான் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News