search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Republic Day"

    • இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்டந்தோறும் குடியரசு தினத்தையொட்டி 14 வயதுக்குட்பட்டோருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, கடந்த மாதம் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் பேட்மிண்டன், டென்னிஸ், கோகோ, கபடி, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    3 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்று அசத்தின. இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தூத்துக்குடி முதலிடத்தை பிடித்தது. சென்னை 2-ம் இடம் பிடித்தது.

    சென்னை அணியில் இடம்பிடித்த புழுதிவாக்கத்தை சேர்ந்த வியாசா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆ.ஜோன்ஸ்ராஜ் எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் அசத்தினார். இதுதவிர அந்த பள்ளி மாணவர்கள் 12 பேர் சென்னை அணியில் இடம்பிடித்தனர்.

    மாணவர் ஜோன்ஸ் ராஜ், கராத்தே மற்றும் ஜூடோ போன்ற வீர கலைகளில் பயிற்சி பெற்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்தவர் ஆவார். வெற்றிபெற்ற தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகளில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.

    • டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
    • இதில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடந்தது. அதில் நாட்டின் பன்முக கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

    இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இவை தவிர மத்திய அமைச்சரவையின் 9 அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

    இதற்கிடையே, சிறப்பான ஊர்திகளை இரு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து பரிசு வழங்குவர். ஒன்றை நடுவர் குழுவினர் இறுதி செய்வர். இரண்டாவது பிரிவில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த ஊர்திகள் தேர்வு செய்யப்படும்.

    இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் இடம்பிடித்த, 'பழந்தமிழகத்தின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்' என்ற கருப்பொருள் அடிப்படையிலான அலங்கார ஊர்தி, நடுவர் குழுவினரால் 3-ம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    கைவினை மற்றும் கைத்தறித் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    டோர்டோ சுற்றுலா கிராமத்தை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்தி இரண்டாம் பரிசையும், மக்கள் தேர்வில் முதலிடமும் பிடித்தது.

    • டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.
    • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி 75-வது குடியரசு தினத்தை ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சிறப்பாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை எம்.எஸ். டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.

    வீடியோவில் கொடி கம்பத்தில் உயரமாக பறக்கும் தேசிய கொடியை எம்.எஸ். டோனி பார்த்து கொண்டே நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு லைக் மற்றும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

     


    விரைவில் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடரில் எம்.எஸ். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்க இருக்கிறார். கடந்த ஆண்டுடன் ஐ.பி.எல்.-இல் இருந்து டோனி ஓய்வு பெறுவார் என பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.

    அந்த வகையில், இது தொடர்பான கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். அதில், இது அவரின் கடைசி தொடராக இருக்குமா என்பதை எம்.எஸ். டோனி தான் முடிவு செய்வார் என தெரிவித்து இருக்கிறார்.



    • இந்தியா தனது 75-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது.
    • இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

    நாட்டின் 75-வது குடியரசு தின விழா நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றிய நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில், குடியரசு தினம் கொண்டாடும் இந்தியாவுக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் உலகின் அதிக சவாலான விஷயங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து எதிர்நோக்குகிறது என தெரிவித்தார்.

    "காமன்வெல்த்-இன் 75-வது ஆண்டு விழாவில் நமது உறவு மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன். இது நம்மை ஒன்றிணைக்கும் நிலையான மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளின் பொருத்தமான நினைவூட்டல் ஆகும். உலகின் கடினமான சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள நமது நாடுகள் தொடர்ச்சியாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்," என்று மன்னர் சார்லஸ் தெரிவித்தார். 

    • அடாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கானோர் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டம் அடாரி எல்லைப்பகுதி பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது. இருநாட்டு படையினரும் இந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த எல்லைப்பகுதியில் தினமும் காலை இருநாட்டு பாதுகாப்புப் படையினரும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலையில் இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமாகும்.

    குறிப்பாக, இந்திய சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அடாரி-வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை கண்டுகளிப்பர்.

    இந்நிலையில், 75-வது இந்திய குடியரசுதின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அடாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

    எல்லை பாதுகாப்புப் படைவீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய தேசியக்கொடியை அசைத்தும், ஜெய்ஹிந்த் என கோஷமிட்டும் உற்சாக குரல் எழுப்பினர்.

    • சிறு வயது முதலே ஓவியத்தில் நாட்டம் உள்ள மாணவி.
    • சிறுமியின் இந்த உலக சாதனை முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி பகுதியை சேர்ந்த ஜேக்கப் ஞானசெல்வன், எஸ்தர் இவர்களின் மகள் ஜுடித்கிப்டி, தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறு வயது முதலே ஓவியத்தில் நாட்டம் உள்ள மாணவி, நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் ஓவியத்தில் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டார். 6 x4 அளவிலான வெள்ளை ஓவிய தாளில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை மற்றும் நீலம் ஆகிய அக்ரிலிக் வண்ணங்களை பயன்படுத்தி 7500 முறை பெருவிரல் கை ரேகைகளை கொண்டு இந்திய தேசியக் கொடியை 3 மணி நேரம் 53 நிமிடங்களில் உருவாக்கி உள்ளார்.

    சிறுமியின் இந்த உலக சாதனை முயற்சியை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • குடியரசு தின விழா தேநீர் விருந்து, ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே தெரிவித்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.

    அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா தேநீர் விருந்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது குறிப்பிடதக்கது.

    • மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, முன்னாள் துணை முதல்வர் மயங்கி சரிந்தார்.

    நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் தெலுங்கானா பவனில் இன்று காலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. இவ்விழாவில் தெலுங்கானா மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, தெலுங்கானா முன்னாள் துணை முதல்வர் மஹ்மூத் அலி திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி சரிந்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் கைத்தாங்கலாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.



    2018-ஆம் ஆண்டில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மஹ்மூத் போட்டியிட்டு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்ததுடன், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் , விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம்.

    சென்னை:

    நாடு முழுவதும் 75-வயது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலை உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதன்பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் , விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் அரசு பள்ளி கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில், பள்ளக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா' என பதிவிட்டு குடியரசு தின விழாவில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    • தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார்.
    • குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.

    நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றிய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து, பார்வையாளர் அரங்கில் இமானுவேல் மேக்ரானை வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார். பிரான்ஸ் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரான்ஸ் அதிபர், "இந்நிகழ்வு பிரான்ஸ்-க்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நன்றி இந்தியா" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும், 25- ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து இந்திய திருநாட்டின் விடுதலைக்காக மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின், மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ்சூப்பிரண்டு சண்முகம், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் திவ்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். மேலும், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை, வேளாண்மை உழவர் பாதுகாப்புத் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, தாட்கோ ஆகியவற்றின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 25 பேருக்கு ரூ. 27 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 24 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 579 அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிநடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சீபாஸ் கல்யாண், வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சுகபுத்திரா, கூடுதல் போலீஸ் சூப்பரண்டு ஹரிகுமார், மீனாட்சி, திருவள்ளூர் துணை சூப்பரண்டு அனுமந்தன், நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.


    செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நன்னடைத்தை சான்றிதழ்களை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடினர்.
    • நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

    நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் குடியசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடினார். 'படே மியான் சோட்மியான்' படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் தற்போது நடந்து வருகிறது.

    இந்த படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடினர்.

    ஜோர்டான் நாட்டு கடற்கரையில் இருவரும் இன்று அதிகாலை பெரிய அளவிலான மூவர்ண கொடியை கையில் ஏந்தியவாறு உற்சாகமாக ஓடி, குடியரசு தினவிழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். பின்னணியில் ஒலிக்கும் வந்தே மாதரம் பாடலுடன் ஜோர்டான் கடற்கரையில் இருவரும் ஓடியவாறு எடுக்கப்பட்ட வீடியோ நாட்டின் தேச உணர்வைத் தூண்டுவதாக அமைந்தது.

    இந்த வீடியோவை 'எக்ஸ்' தள பக்கத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.


    ×