தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு

கோவையில் 21-ந்தேதி ஜல்லிக்கட்டு: 700 காளைகள் - 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

Published On 2022-01-18 04:46 GMT   |   Update On 2022-01-18 04:46 GMT
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் 2 ஆயிரத்தை கடந்து செல்வதால் மாவட்ட நிர்வாகம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை:

கோவை மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் செட்டிப்பாளையம் எல்.அன்.டி. பைபாஸ் ரோட்டில் போட்டிகளை நடத்துவற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மருதமலை சேனாதிபதி கூறியதாவது:-

இதுவரை போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 1000 காளைகள் வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் 600 காளைகள் முதல் 700 காளைகள் வரை களம் இறக்கப்பட உள்ளது. இதில் தென் மாவட்டங்களான தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் வருகின்றன. கொங்கு மண்டலத்தில் இருந்து 200 காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மாடுபிடி வீரர்கள் 300 பேர் கலந்து கொள்கிறார்கள். காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயமாக செலுத்தியதற்கான சான்றிதழை வைத்து இருக்க வேண்டும். வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் 150 பேர் வரை கலந்து கொண்டு போட்டிகளை ரசிக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் 2 ஆயிரத்தை கடந்து செல்வதால் மாவட்ட நிர்வாகம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News