தமிழ்நாடு
கோப்புப்படம்

14 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு- அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ.34,000 சம்பளம் கூடுதலாக கிடைக்கும்

Published On 2021-12-29 07:15 GMT   |   Update On 2021-12-29 07:15 GMT
தமிழகத்தில் தற்போது 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுதவிர அரசின் பொது நிறுவனங்களில் 3 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.
சென்னை:

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி ஜனவரி 1-ந்தேதி முதல் உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தற்போது 17 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு ஊழியர்கள் பெற்று வருகிறார்கள். புதிய அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தொடர்ந்து அது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படுகிறது.

இதுதவிர பொங்கல் பரிசாக ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500-ம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.1000-ம், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500-ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி முழுமையாக வழங்கி இருப்பதை அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் வரவேற்றுள்ளன.

கொரோனா பாதிப்பு காலத்திலும் அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுதவிர அரசின் பொது நிறுவனங்களில் 3 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். மேலும் 5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். மொத்தம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் இதன்மூலம் பயன் அடைகிறார்கள்.

உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படியின் மூலம் அரசு ஊழியர்கள் அடுத்தமாதம் குறைந்தபட்சம் ரூ.2,198 முதல் அதிகபட்சமாக ரூ.34,000 வரை கூடுதலாக பெறுவார்கள். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக ரூ.2,198 முதல் அகவிலைப்படி கிடைக்கும்.

அதேபோல கூடுதல் செயலாளர் மற்றும் துணை செயலாளர் வரை உள்ள உயர் அதிகாரிகளுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர தமிழக அரசில் அதிகபட்சமாக சம்பளம் பெறும் (ரூ.2 லட்சத்து 25 ஆயிரம்) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ரூ.34,000 வரை அகவிலைப்படி பலன் கிடைக்கிறது.

தலைமை செயலகத்தில் மட்டும் 6,428 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கீழ்நிலையில் உள்ள ஊழியர்கள் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை அரசு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அகவிலைப்படி உயர்வால் தலைமைச்செயலக ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,099 முதல் அதிகபட்சமாக ரூ.15,750 வரை சம்பளத்துடன் அகவிலைப்படி உயருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சங்க மாநில தலைவர் இரா. சண்முகராஜன், தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இள மாறன், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர் சங்க தலைவர் சவுந்தர்ராஜன், அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில தலைவர் வெங்கடேசலு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News