தமிழ்நாடு
குற்றாலம் மெயினருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கடலுக்கு செல்லும் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர்

Published On 2021-12-05 04:42 GMT   |   Update On 2021-12-05 04:42 GMT
மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் பெய்து மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயினருவியின் 2 பகுதிகளிலும், ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவைவிட கூடுதலாக பெய்து வருகிறது.

கடந்த 25-ந்தேதி அதிகனமழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை சற்று ஒய்ந்து இருந்தது. இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது.

இதேபோல் தென்காசி, நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பரவலாக பெய்தது.

அதிகபட்சமாக நம்பியாறு அணை பகுதியில் 84 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதேபோல் எட்டயபுரத்தில் 56.4, நாங்குநேரியில் 55, ராதாபுரத்தில் 27 மி.மீட்டர் மழை பெய்தது. மேலும் தூத்துக்குடி, கடம்பூர், குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, விளாத்திகுளம், கீழஅரசடி, காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம், அம்பை, சிவகிரி, சேர்வலாறு உள்ளிட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

மழை காரணமாக 143 உச்ச நீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் இன்றைய நீர்மட்டம் 136.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,412.34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து 2,704.58 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 137.20 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 116.15 அடியாகவும் உள்ளது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் குற்றாலத்தில் இருந்து அதிகளவில் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 82.70 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 82 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.96 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 131.25 அடியாக உள்ளது. எனவே இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணையின் இன்றைய நீர்மட்டம் 131.25 அடியாக உள்ளது. அணை நிரம்ப 1 அடிக்கு குறைவாகவே உள்ளதால் அணைக்கு வரும் 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் பெய்து மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயினருவியின் 2 பகுதிகளிலும், ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதேபோல் புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த மழையால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.


Tags:    

Similar News